நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நாமலுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பண தூய்மையாக்கல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 20 வருட சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடமுள்ளதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
30 மில்லியன் ரூபாய் பணத்தை தவறான முறையில் பெற்று கொண்டமை தொடர்பில் நாமலுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகள் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நாமல் ராஜபக்ஷ சிறை செல்வது உறுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நாமலுக்கு எதிரான குற்றச்சாட்டு தாக்குதல் செய்யப்பட்டது. அதற்கமைய முதல் முறையாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகிய நாமல் ராஜபக்ச உட்பட மூவருக்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவினால் கடந்த 6ஆம் திகதி குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
6 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட அழைப்பாணையை ஏற்று, நாமல் ராஜபக்ச, சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி சமரநாயக்க ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகினர்.
அதற்கமைய நீதிமன்றத்தில் ஆஜராகிய சந்தேகநபர்களை 10 இலட்சம் ரூபாய் பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜராகாத ஏனைய சந்தேக நபர்களான இந்திக்க பிரபாத கருணாஜுவ மற்றும் இரேஷா சில்வா ஆகியோர் தொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்வதற்கு எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்ரேட் சர்விஸ் நிறுவனம் வேறு நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது, 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணம் முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.