சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா இது பற்றி இன்று ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.
சுகாதார அமைச்சர் என்றவகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களை மீறி நடந்து கொள்கின்றார். அரசாங்க மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளை கிஞ்சித்தும் மதிப்பதில்லை.
புதிய மருத்துவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நேற்றைய நிகழ்வின் போதும் அரசாங்க மருத்துவர்கள் சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த வகையில் இதுவரை காலமும் இருந்து வந்த நடைமுறையை அமைச்சர் ராஜித சேனாரத்ன மீறியுள்ளார்.
எனவே அவருக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்ய தீர்மானித்துள்ளோம் என்றும் மருத்துவர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் எடுபிடிகளாக செயற்படும் அரசாங்க மருத்துவர்கள் சங்கம், மஹிந்தவை பதவியில் இருந்து விரட்டியடிக்க துணிச்சலாக செயற்பட்டவர் என்ற ஒரே காரணத்துக்காக அமைச்சர் ராஜித சேனாரத்ன மீது காழ்ப்புணர்ச்சியுடன் செயற்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.