ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்யப் போவதில்லை என்று துறைமுக அபிவிருத்தி, கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
அர்ஜுன ரணதுங்க துறைமுக அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு சீனநிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றிருந்தது. அதற்கான அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் புதிதாக துறைமுக அபிவிருத்திக்குப் பொறுப்பான அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த சமரசிங்க, முன்னைய அமைச்சர் அர்ஜுனவின் தீர்மானத்தை கிடப்பில் போடும் முடிவில் இருக்கின்றார்.
அதற்குப் பதிலாக சீன நிறுவனம் ஒன்றுடன் இணைந்து கூட்டு வர்த்தக முயற்சியாக ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் அவர் ஆராயத் தலைப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சீன நிறுவனம் ஒன்றுடன் இரண்டு தடவைகள் கலந்துரையாடியிருப்பதாகவும், எந்தக்கட்டத்திலும் நாட்டுக்கு இழப்பு ஏற்படும் வகையில் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை விற்பனை செய்வதில்லை என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உறுதிபடத் தெரிவித்துள்ளார்.