2006 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவை வென்றது இலங்கை..!

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் 8ஆவது போட்டி லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்ற நிலையில் இலங்கை அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இந்நிலையில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. இதில் ஷிகார் தவான் சிறப்பாக விளையாடி 125 ஓட்டங்களும், ரோஹித் சர்மா 78 ஓட்டங்களும், டோனி 63 ஓட்டங்களும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லசித் மலிங்க 70 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கட்டுகளும், சுரங்க லக்மால் 72 ஓட்டங்களுக்கு ஒரு விக்கட்டும் பெற்று மந்தமான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தாலும், 3 ஓவர்கள் மட்டுமே வீசிய அசேல குணரத்ன 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 1 விக்கட்டை வீழ்த்தியிருந்தார்.

இந்நிலையில் 322 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக வந்த டிக்கவெல்ல 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்கவே, தொடர்ந்து வந்த குஷால் மெண்டிஸ் 89 ஓட்டங்களும், குணதிலக 76 ஓட்டங்களும் பெற, குஷால் பெரேரா 47 ஓட்டங்கள் பெற்ற நிலையில் உபாதை காரணமாக வெளியேறினார்.

களத்திலிருந்த அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் உபாதையிலிருந்து மீண்டு வந்து அரைசதம் கடக்கவே, மறுமுனையில் அசேல குணரத்ன 34 ஓட்டங்களை பெறவே இலங்கை அணி 48.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்திய பந்துவீச்சில் புவனேஸ்வர்குமார் மாத்திரம் 54 ஓட்டங்களுக்கு 1 விக்கட்டை வீழ்த்த, ஏனைய இரு வீரர்களும் ரன் அவுட் முறையில் வெளியேறினார்கள்.

போட்டியில் 93 பந்துகளை எதிர்கொண்டு 89 ஓட்டங்கள் பெற்ற குஷால் மெண்டிஸ் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடனான தோல்வியை தொடர்ந்து, இந்தியாவை வீழ்த்தியதால் 2 புள்ளிகளை பெற்றுள்ளது.

அத்தோடு இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டிற்கு பிறகு (324), இலங்கை அணி அடைந்த இரண்டாவது பெரிய இலக்கு இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.