பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நிறைவு : யார் ஆட்சி? கருத்துக்கணிப்பில் தகவல்

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.

முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 316 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 266 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை கன்சர்வேடிவ் கட்சி பெற முடியாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.