பிரிட்டன் தேர்தல்: எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி முன்னிலை

பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டு வரை இருந்த நிலையில். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் வலிமை வாய்ந்த, நிலையான தலைமை தேவை என்று கூறி பாராளுமன்றத்துக்கு திடீர் தேர்தலை நடத்தப்போவதாக பிரதமர் தெரசா மே அறிவித்தார். இதற்கு பாராளுமன்றமும் ஒப்புதல் அளித்தது.

அதைத்தொடர்ந்து பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கின. இந்த தேர்தலில் பிரதமர் தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், ஜெர்மி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 650 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், 4.6 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகின்றது.

290 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 118 இடங்களையும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 138 இடங்களிலும் வென்று முன்னிலை வகிக்கிறது.

முன்னதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சி 314 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 266 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் ஆட்சியமைக்க தேவையான 326 இடங்களை எந்த கட்சியாலும் பெற முடியாது எனவும், தொங்கு பாராளுமன்றம் அமையும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.