விமானிகளின்றி வானில் பறக்கும் பயணிகள் விமானங்களுக்கான தொழில்நுட்பம் ஆய்வில் இருப்பதாக உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் தெரிவித்துள்ளது.
ஓட்டுநரின்றி இயங்கும் கார், பஸ் போன்றவை தற்போது பல்வேறு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. பரிசோதனையின் ஒரு பகுதியாக பல இடங்களில் இவை இயக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதே, போல் விமானிகளின்றி பறக்கும் பயணிகள் விமானங்களுக்கான தொழில்நுட்பம் ஆய்வில் இருப்பதாக, போயிங் நிறுவனத்தின் துணை தலைவர் மைக் சின்நெட் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் விமானக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது. இதில் கலந்து கொண்ட சின்நெட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், “அந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை கட்டமைப்பு ஏற்கெனவே உள்ளது. ஆனால், சுயமாக பறக்கின்ற இத்தகைய விமானங்கள் கடினமான பாதுகாப்பு தரக்கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும். அவசரமாக தரையிறங்குவதை இத்தகைய விமானங்கள் நிறைவேற்றுமா? என்பது தெளிவாகவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.
ஆளில்லாமல் இயங்கும் சிறிய ரக விமானங்கள் தற்போது பல்வேறு நாடுகளின் ராணுவத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.