ரஜினியை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார்: திருமாவளவன்!

ரஜினிகாந்தை முதல்வராக்க தவறினால் அவர் பிரதமராகி விடுவார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை ஒரு அரசியல்வாதி என்ற முறையில் வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டை தமிழர்தான் ஆளவேண்டும் என்பதெல்லாம் இனி எடுபடாது. மொழி சார்ந்த கொள்கைகள் மட்டுமே சரிவராது.

ரஜினிகாந்த் தமிழரல்லாதவர், மராட்டியர், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார். தமிழ்நாட்டை ஒரு தமிழர் ஆளவேண்டும் என்பதை விட ஒரு மனிதர் ஆளவேண்டும்.

ரஜினிகாந்தை தமிழக முதல்வராக்க தடை செய்தோமானால் அவர் இந்த நாட்டின் பிரதமராகி விடுவார். ஒரு மாநிலத்தை ஆள தடை செய்தால் அவரை இந்தியாவை ஆள வைத்து விடுவார்கள் என்று தொல் திருமாவளவன் கூறினார்.

தமிழக அரசு செயலிழந்து கிடப்பதாக தெரிவித்த திருமாவளவன் அதிமுக இரு தரப்பினரும் ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது. மோடியின் மூன்றாண்டு ஆட்சியில் திட்டங்கள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை, மாறாக அனைத்தும் கார்ப்ரேட் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி அரசு மாட்டு வணிகத்தை கார்ப்பரேட் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மாட்டுக்கறிக்கான தடை இந்தியா முழுமையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் திருமாவளவன் தெரிவித்தார். பாஜக தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பில்லை எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.