இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று மக்கள் காத்து இருக்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

தமிழ் மாநில தேசிய லீக் கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் தலைமை தாங்கினார். அபுபக்கர் எம்.எல்.ஏ., தலைமை நிலைய செயலாளர் சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் இப்போது நடக்கிற ஆட்சி மீதும், மத்தியில் இப்போது நடக்கிற ஆட்சி மீதும் மக்களுக்கு அளவிட முடியாத வெறுப்பு இருக்கிறது. மோடி ஆட்சி பெரும்பான்மையை பெற்று இருக்கிறது. அதனால் அவர்கள் தான்தோன்றி தனமாக செயல்படுகிறார்கள். அவர்களின் 3 ஆண்டு கால ஆட்சி மக்களின் சோதனைகாலமாக இருக்கிறது.

தங்களின் குறைகளை மறைக்க தினமும் புது புது அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை திசை திரும்புகிறார்கள்.

ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தார்கள், இப்போது மாட்டிறைச்சிக்கு தடை போடுகிறார்கள்.

கேரள மாநிலத்தில் இதை கண்டித்து சட்டசபையில் சிறப்பு தீர்மானம் போடுகிறார்கள். பிற மாநிலங்கள் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டிக்கிறது. ஆனால் தமிழகத்தின் முதல்-அமைச்சரிடம் இது குறித்து கேட்டால், நான் அந்த உத்தரவை படிக்கவில்லை. படித்து விட்டு சொல்கிறேன் என்கிறார். இன்னுமா அவர் படிக்கவில்லை. அதிகாரிகள் அவரிடம் படித்து சொல்லவில்லையா? இப்படிப்பட்ட ஒரு தெம்பு இல்லாத ஒரு ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது.

இந்த ஆட்சியை அகற்ற இன்னும் ஆண்டுகள் பொறுக்க வேண்டுமா? என்று இங்கே பேசியவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாவிட்டால், என் வீட்டு முன்பு போராடுவோம் என்று கூட இங்கே பேசியவர்கள் சொன்னார்கள். நீங்கள் மட்டுமல்ல, தமிழகம் முழுவதிலும் மக்கள் இதை தான் கேட்கிறார்கள். இந்த ஆட்சி எப்போது கவிழும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

நான் செல்லும் இடங்களில் கூட, ஏன் இந்த ஆட்சியை விட்டு வைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள். கடற்கரைக்கு ஓய்வெடுக்க சென்றால் கூட அங்கேயும் வந்து இதே கேள்வியை கேட்கிறார்கள். மக்களின் எண்ணம் இதுவாக தான் இருக்கிறது.

அவர்களின் கேள்விக்கு விரைவில் விடை கிடைக்கும். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 2, 3 அணிகளாக உருவாகி விட்டார்கள். வேடிக்கையாக இருக்கிறது. இப்படியொரு ஆட்சி நமக்கு தேவையா? இவர்களுக்கு எப்படியாவது ஆட்சியை காப்பாற்றி கொள்ளையடிக்க வேண்டும். அது தான் பிரதானமாக இருக்கிறது. இதற்கு நீங்கள் முடிவு கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ். பாரதி எம்.பி., மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க. வர்த்தக அணி துணைச்செயலாளர் பாண்டிச்செல்வம், பகுதி தலைவர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.