சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் இரவு நடந்த 7-வது லீக்கில் தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் (பி பிரிவு) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா பாகிஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 219 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவிட் மில்லர் 75 ரன்கள் (நாட்-அவுட்) எடுத்தார்.
தொடர்ந்து ஆடபாகிஸ்தான் 27 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது பாபர் அசாம் (31 ரன்), சோயிப் மாலிக் (16 ரன்) களத்தில் நின்றனர். ஆட்டத்தை தொடர முடியாத அளவுக்கு மழை பலமாக பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. 27 ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 101 ரன்களே போதுமானது. எனவே அந்த அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி அரைஇறுதி வாய்ப்பில் இருந்து வெளியேறாமல் தப்பியது. 2-வது ஆட்டத்தில் ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு இது முதல் தோல்வியாகும்.
தோல்வி ஏமாற்றத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் டிவில்லியர்ஸ்.
தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘பாகிஸ்தான் அணியினர் முதல் 10-15 ஓவர்கள் நேர்த்தியாக பந்து வீசி எங்களுக்கு கடும் நெருக்கடி அளித்தனர். தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. மழை எப்படியும் வரும் என்று அடிக்கடி ஆலோசித்தோம். ஆனால் மழை எப்போது வரும் என்பதை கணிக்க முடியாத நிலையில், கேப்டனாக அணியை வழிநடத்துவது கடினமாக இருந்தது. மழையால் வெறும் 27 ஓவர்கள் மட்டுமே விளையாடுவோம் என்று தெரிந்து இருந்தால் நாங்கள் இன்னும் ஆக்ரோஷமாக செயல்பட்டு இருப்போம். எது எப்படியோ இறுதியில் சிறப்பாக செயல்பட்ட அணி வெற்றி பெற்று இருக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் எங்களுக்கு மிகப்பெரிய போட்டியாகும். அடுத்து என்ன தேவை என்பது எங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்ப நாங்கள் தயாராக வேண்டியது அவசியம். எனக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு காயம் குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை’ என்றார்.