கிளிநொச்சி நகர பகுதியில் நேற்று மாலை வாள்வெட்டு தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தென்பகுதியிலிருந்து மோ.சைக்கிளில் சுற்றுலா வந்த இளைஞர் குழுவினரின் வாகனமே சேதமாக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகர பகுதியில் வீழ்ந்து காணப்படும் நீர்த்தாங்கியை பார்வையிடுவதற்காக அங்கு வருகைதந்த மேற்படி குழுவினர் மோ.சைக்கிளை வீதியோரமாக நிறுத்தி விட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த சம யம் அங்குவந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொள்ள எத்தனித்த வேளை அச்சமடைந்த தென்பகுதி இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளனர். வருகை தந்த இனந்தெரியாத நபர்கள் அவர்களது மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதமாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் காரணமாக கிளிநொச்சி நகர் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. கிளிநொச்சி பொலிஸாரின் முதலாம் கட்ட விசாரணைகளில் தாக்குதலை மேற்கொண்டவர் எனும் சந்தேகத்தில் ஒருவர் இனம்காணப்பட்ட போதும் யாரும் நேற்றிரவு வரை கைது செய்யப்படவில்லை.
அத்துடன் குறித்த தாக்குதல் சம்பவம் மதுபோதையில் இருந்தவர்களினாலையே மேற்கொள்ளப்பட்டு உள்ளது என தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.