இந்தியாவை பெருமைப்பட வைத்த `தங்கல்’ : சீனாவின் மூத்த தலைவர் பாராட்டு

சமீபகாலமாகவே இந்திய படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே சீனாவில் திரையிடப்பட்ட அமீர்கானின் ‘3 இடியட்ஸ்’, ‘பிகே’ உள்ளிட்ட படங்கள் சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்டது. இதையடுத்து, நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடித்து வெளிவந்த ‘தங்கல்’ படம் கடந்த மாதம் சீனாவில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், தங்கல் படத்திற்கு சீனாவில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இதற்கு முன்பு சீனாவில் திரையிடப்பட்ட அனைத்து இந்திய படங்களின் சாதனைகளையும் முறியடித்துள்ள தங்கல், சீனாவில் மட்டும் ரூ.1100 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. மொத்த வசூலில் ரூ.1900 கோடியை நோக்கி வெற்றி நடைபோட்டு வருகிறது.

சீனாவில் வெளியான ஹாலிவுட் அல்லாத படங்களில் ‘தங்கல்’ முதல் இடத்தை பிடித்திருக்கிறது. சீனாவில் மட்டும் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிமான மக்கள் இதுவரை ‘தங்கல்’ படத்தை பார்த்து இருக்கின்றனர்.

இந்நிலையில், ‘தங்கல்’ படத்தின் இத்தகைய சாதனையை சீனாவின் மூத்த அரசியல் கட்சித் தலைவர் லியூ யுன்ஷன் பாராட்டி உள்ளார். சீனாவில் சமீபத்தில் வெளியான படங்களில் அதிக வசூலை ‘தங்கல்’ படம் வசூலித்திருக்கிறது. ‘தங்கல்’ படத்தால் இந்தியா பெருமைப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ‘தங்கல்’ படத்திற்கு ஊடகங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

`தங்கல்’ படத்தின் வெற்றியை அடுத்து, `பாகுபலி-2′ படம் வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது.