‘காதலுக்கு மரியாதை’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், சரண்யா மோகன். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் தங்கையாகவும், ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நயன்தாராவின் தங்கையாகவும், ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் பாவனா தங்கையாகவும் நடித்து இருந்தார். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
மலையாள பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருந்தார். சரண்யா மோகனுக்கும் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவுக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் உடல் எடை கூடி குண்டான தோற்றத்தில் இருக்கும் சரண்யா மோகனின் சமீபத்திய படம் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த படத்தை பார்த்தவர்கள் ஒல்லியாக இருந்த சரண்யா மோகனா இப்படி மாறிவிட்டார் என்ற ஆச்சரியத்துடன் அவரது தோற்றத்தை கிண்டல் செய்து பேஸ்புக், வாட்ஸ் அப்களில் கருத்துகள் பதிவிட்டனர்.
ஒரு பிள்ளை பெற்றதும், ‘ஆன்டி’யாகி விட்டார் என்று சிலர் கருத்து பதிவிட்டனர். நகைச்சுவை நடிகர் வடிவேலு, “இப்படித்தான் எல்லோரும் அவங்க பொண்டாட்டிய வேணுங்கிறதை வாங்கி கொடுத்து நல்லபடியா பார்த்துக்கணும்” என்று சொல்வது போன்று சரண்யா மோகனின் உடல் பருமனை கேலி செய்து ‘மீம்ஸ்’களும் வெளிவந்தன.
இது சரண்யா மோகனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. குழந்தையுடன் இருப்பது போன்ற தனது படத்தை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு கிண்டல் செய்தவர்களுக்கு பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
“பிரசவத்துக்கு பிறகு பெண்கள் குண்டாவது இயற்கை. பிரசவத்தில் ‘சிசரியன்’ செய்து கொண்டால், உடல் எடை கூடத்தான் செய்யும். நான் தாய் ஆனதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் குழந்தைக்கு உணவு ஊட்டுவதிலும் சந்தோஷப்படுகிறேன். பெண்களுக்கு இதுவே முக்கியமான விஷயங்கள். தாயாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்”.
இவ்வாறு சரண்யா மோகன் பதில் அளித்துள்ளார்.