இன்றைய சூழ்நிலையில் எல்லா உறவுகளும் தனித்தனி தீவுகளாக பிரிந்து வாழ்கின்றன. ஒருவரோடு ஒருவர் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய மன அழுத்தத்தை உண்டுபண்ணும் என்பது போகப் போகத் தான் தெரியும். இப்போது ஒருவரது உள்ளத்து உணர்வுகளை பெற, இங்கே அவருக்காக யாருமில்லை.
ஆங்காங்கே மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். முன்பின் தெரியாத அவர்களிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு குடும்ப பிரச்சினைகளை சொல்லி ஆறுதலும், ஆலோசனைகளும் பெறுகிறார்கள். முற்காலத்தில் எல்லா பிரச்சினைகளையும் பேசி தீர்க்க வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள். இப்போது தனிக்குடித்தனமாகிவிட்டதால் பெரியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். வீட்டுப் பெரியவர்கள் உதாசீனப்படுத்தப்பட்டதால் இன்றைய இளைய தலைமுறைகள் வழிகாட்டுதலின்றி தவிக்கின்றனர்.
பெரும்பாலான பெற்றோர்கள் திருமணம், குடும்ப விழாக்களுக்குகூட குழந்தைகளை அழைத்துச் செல்வதில்லை. கடமைக்காக இருவர் மட்டும் போகிறார்கள். சில நேரங்களில் கணவனோ, மனைவியோ யாராவது ஒருவர்தான் போய் தலையைக்காட்டுகிறார்கள். குழந்தைகளை அழைத்துச் செல்லாததால் உறவுகளை அறிமுகப்படுத்தும் நல்ல சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்படுகின்றன. ஏனோ தெரிய வில்லை, வருங்கால சந்ததிகள் உறவுகள் தெரியாமலேயே வாழ வேண்டும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அது பெருந்தவறு.
கோவில் திருவிழாக்கள், பண்டிகைகள் எல்லாமே உறவுகளுடன் கலக்கும் சந்தர்ப்பத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. அவைகளை திட்டமிட்டு முறையாக பயன்படுத்தி, ஆண்டுக்கு ஒரு முறையாவது உறவுகளை சந்திக்கும் வழக்கத்தை வைத்துக்கொள்ளவேண்டும்.
உறவினர்களை வீட்டிற்கு அழைத்து வந்து குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டும். வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் குழந்தைகள் வெளியே வந்து அந்த அறையையே எட்டிப்பார்ப்பதில்லை. பெரும்பாலான பெற்றோரும் அதை விரும்புவதில்லை. ஏன் இந்த வேண்டாத கட்டுப்பாடு? அவர்களை உறவினர்களோடு பழக அனுமதிப்பது, மனோரீதியான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
அம்மா-அப்பாவே உலகம் என்று குழந்தைகள் வாழவேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர் நினைக்கிறார்கள். அது தவறு. பெற்றோரே தனக்கு கெடுதல் செய்வது போன்று தோன்றும்போது குழந்தைகள் முறையிட நம்பிக்கையான உறவுகள் வேண்டும். பெற்றோர் செய்வது நியாயம் என்றால், அதை அந்த உறவினர்கள்தான் எடுத்துக்கூறவேண்டும். அதுவே குழந்தைகள் மனதில் ஆழமாக பதியும். தேவைப்படும்போது தங்களோடு உறவாட உறவுகள் இல்லாமல் போனால், எதிர்காலத்தில் தங்கள் பெற்றோர் மீதே குழந்தைகளுக்கு ஒருவித வெறுப்பு தோன்றிவிடும்.
விருந்தோம்பலுக்கு பெயர்போன இந்திய மக்கள் இன்று உறவினர்களைத் தவிர்க்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் அம்மா-அப்பாவே தூரத்து உறவாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
உறவினர்களிடம் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும். யாரும் நூறு சதவீதம் நல்லவராகவும் இருக்க முடியாது. கெட்டவராகவும் இருக்க முடியாது. அதனால் மற்ற உறவினர்களைப் பற்றி குழந்தைகள் முன் குறை சொல்வதை நிறுத்துங்கள். இது அவர்கள் மனதை பெரிதும் பாதிக்கும் செயல். இதனால் அவர்கள் காரணமில்லாமல் உறவுகளை வெறுக்க நேரிடும். என்றாவது நேரில் பார்க்க நேர்ந்தாலும் அவர்களை உதாசீனப்படுத்துவார்கள். குழந்தைகள் மனது துவேஷத்தால் பாழ்படக்கூடாது. அவர்கள் மனதில் அன்பை மட்டுமே விதைக்கவேண்டும். அப்போதுதான் நாம் அதை அறுவடை செய்ய முடியும்.
குழந்தைகளின் உணர்வுகளை கட்டுப்படுத்தி வழி நடத்த வேண்டும். அவர்கள் வளரவளர அதுதான் நமக்கு பெரிய சவாலாக இருக்கும். எளிதில் வெளிப்படுத்தக்கூடிய குணம் கோபம்தான். அதை கட்டுப்படுத்த கற்றுத்தர வேண்டும். கோபத்தில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களை சிக்கலில் ஆழ்த்திவிடும். உறவுகள் சிதைவதும் பிரிவதும் கோபத்தில்தான். கோபத்தை அவர்கள் உறவுகள் மீது காட்டவும், மரியாதை இல்லாமல் பேசி அவமதிக்கவும் சிறிதும் அனுமதிக்காதீர்கள். கோபம் என்பது குழந்தைகளுக்கானதல்ல. அதை உறவுகள் மீது காண்பித்தால் மற்றவர்கள் மத்தியில் அவர்கள் கெட்ட பெயர் வாங்க வேண்டியிருக்கும். இது அவர்கள் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.
கோபத்தை கட்டுப்படுத்த கற்றுக்கொடுங்கள். கோபத்தை அடக்குவதால் சுற்றி இருப்பவர்கள் அவர்களை மதிப்பார்கள். அவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை வளரும். சட்டென்று ஒரு தவறான முடிவுக்கு வருவது கோபத்தால்தான். அந்தக் கோபம் அவர்களை தவறாக வழி நடத்திவிடும்.
குழந்தைகளின் முதல் ஆசிரியர் பெற்றோர்தான். பெற்றோரைப் பார்த்துதான் அவர்கள் உறவுகளை மதிக்க கற்றுக்கொள்வார்கள். அதனால் அவர்கள் மனதில் உறவுகள் பற்றி நல்ல எண்ணம் தோன்றும் வகையில் நல்ல விஷயங்களை மட்டும் அவர்கள் முன் பேசுங்கள். உறவுகள் மனித வாழ்க்கைக்கு முக்கியமான அஸ்திவாரம். அதை தொலைத்துவிட்டு கட்டிடம் கட்ட முயற்சி செய்யாதீர்கள். உறவுகளை உதாசீனப்படுத்திவிட்டு வாழும் வாழ்க்கையில் பக்க விளைவுகள் அதிகம். அதனால் குழந்தைப் பருவத்திலிருந்தே உறவுகளை அனுசரித்துச் செல்ல அவர்களை பழக்கப்படுத்துங்கள்.