கோவிலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கவேண்டும், யோகியை பார்த்தால் காலில் விழவேண்டும், பெற்றோர், பெரியவர்களைப் பார்த்தால் பாதம் பணியவேண்டும் என்று சொல்கிறார்கள். இவற்றின் அடிப்படை என்ன என்று பார்க்கலாம்.
சத்குரு: காலைத் தொட்டு வணங்குவது, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்வது போன்றவற்றில் கலாச்சார அடிப்படையும் உண்டு, விஞ்ஞான அடிப்படையும் உண்டு. கலாச்சாரம் என்று பார்த்தால், மனிதர்கள் தம் மனதில் உள்ள மரியாதை உணர்வினை வெளிப்படுத்தும் முறை என்று சொல்லலாம். பெரியவர்கள், குறிப்பாக தாய், தந்தையர், நாம் இவ்வுலகில் பிறப்பதற்கு காரணமாய் இருந்திருக்கிறார்கள், அதனால் அவர்கள் காலில் விழும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
நாம் இறைத் தன்மையை உணராமல் இருக்கலாம். ஆனால் கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்று சொன்னதுகூட பெற்றோர்தானே? அதனால், நம் உயிர்வாழ மூலகாரணமாய் இருக்கும் பெற்றோரை வணங்குகிறோம். இதற்கு விஞ்ஞானப் பரிமாணமும் உண்டு. உங்கள் உடலை வெறும் தசை, எலும்பு, நரம்பு என்று வெறும் உறுப்புகளாகப் பார்க்கலாம்.
அல்லது உடல் என்பதை சக்தி அடிப்படையிலும் பார்க்கலாம். இந்த சக்திதான் எல்லா உறுப்புகளின் உருவாக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. இதை குறிப்பிட்ட வகையில் ஒருங்கிணைத்தால், ஒருவரின் உடலிலிருந்து சக்தி வெளிப்படச் செய்யலாம். நம் பாதங்களில் மிகவும் அதிகமான சக்தி ஓட்டம் நடக்கிறது என்று விஞ்ஞானப்பூர்வமாக நிரூபித்து இருக்கிறார்கள். அதை பயன்படுத்திக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டதுதான் காலில் விழும் வழக்கம்.
ஒரு யோகியையோ குருவையோ பார்த்தால் வெறுமனே போய் காலில் விழுவதல்ல. எப்படி விழவேண்டும், எப்படி அவர் பாதங்களைப் பற்றவேண்டும் என்பதற்கு குறிப்பிட்ட வழிமுறைகள் உண்டு. அதை அறிந்து அவர்களின் பாதம் பற்றினால், மிகுதியான சக்தியை அவரிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். அதனால்தான் அந்த யோகியோ குருவோ விரும்பினால் மட்டுமே உங்களை அவர் பாதங்களை தொட அனுமதிப்பார்கள். எல்லா சமயங்களிலும் தொட அனுமதி இல்லை.
கோவிலில் உள்ள சக்தியை பெற்றுக்கொள்ளும் தன்மை இயல்பாகவே அனைவருக்கும் இருப்பதில்லை. எனவே அதனுடன் நீங்கள் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக தரையில் உட்காருவது, உடல் தரையில் படும்படி விழுந்து வணங்குவது ஆகிய வழக்கங்களை ஏற்படுத்தினார்கள். அதுவும் ஆண்கள் என்றால் சட்டையைக் கழற்றிவிட்டு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கலாம். பெண்கள், ஈர உடையுடன் சாஷ்டாங்கமாக வணங்கவேண்டும் என்று வகுத்தார்கள்.
யோக முறைப்படி சொல்லப் போனால், சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது சூரிய நமஸ்காரத்தின் மிக முக்கியமான ஒரு நிலை.
ஆனால், தற்சமயம் பொத்தென்று உடலை கீழே போட்டு உடலின் அனைத்து பாகங்களும் தரையில் படுமாறு வணங்குகிறோம். கோவிலில் படுத்து உறங்குவது போல் கீழே கிடப்பதில் அத்தனை சுகமோ என்னவோ? ஆனால், பாரம்பரிய முறைப்படி சாஷ்டாங்கமாகத்தான் ஒருவர் விழுந்து வணங்கவேண்டும். இவ்வாறு செய்வதற்கு பல சிறப்புகள் உண்டு.