தமிழகத்திலும் எங்களை நிர்வாணமாக்கி ஓட விடாதீர்கள்: குமுறிய அய்யாக்கண்ணு

தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் சென்னையில் இன்று போராட்டம் தொடங்கியுள்ளது.

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சேப்பாக்கத்தில் இன்று விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அய்யாகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், வரலாறு காணாத வறட்சியை கண்ட தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.

ரூ.1748 கோடியை அடுத்த வருடம் பயிர் செய்வதற்கு கொடுக்கிறார்கள். அழிந்துபோன எங்களுடைய பயிருக்கு ஏன் நஷ்ட ஈடு கொடுக்கவில்லை.

எங்கள் வயலில் ஹைட்ரோ கார்பனையும், மீத்தேனையும் எடுத்து எங்களை மத்திய அரசு அழிக்கப் பார்க்கிறது.

எங்களை நிர்வாணமாக்கி ஓடவிடாதீர்கள். நாங்கள் டெல்லியில் நிர்வாணமாக ஓடினோம்.

அதுபோல தமிழகத்திலும் எங்களை நிர்வாணமாக ஓடவிடாதீர்கள் என அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.

இன்றிலிருந்து அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை 32 நாட்கள் போராட்டம் நடத்த உள்ளதாக கூறிய அய்யாக்கண்ணு இறந்த விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தப் போராட்டம் இந்தியா முழுக்க தொடரும், தேர்தலின் போது விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்பதும், தேர்தல் முடிந்தவுடன் அடிமைகள் போல நடத்துவதும் தொடர்வதாக அய்யாகண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.