தன்னுடைய தயவில் தான் ஆட்சி நடக்கிறது எனவும் அரசை கலைக்கவும் தயங்கமாட்டேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் தினகரனை இதுவரையிலும் 30க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் ஆட்சி கவிழலாம் எனவும் அதிமுக-வினர் பேசி வருகிறார்கள்.
மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் பா.ஜ.வுக்கு அதிமுக-வின் ஆதரவு வேண்டுமானால் அதை அவர்கள் நேரில் வந்து கேட்கட்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கூறி வருகிறார்கள்.
இந்த விடயங்ளை விரும்பாத எடப்பாடி, என்னுடைய தயவில் தான் ஆட்சி நடக்கிறது. அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள் என எம்.எல்.ஏக்களை எச்சரித்துள்ளாராம்.
அதே போல, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று பேசுகையில், நான் உள்பட அனைவருமே சசிகலா குடும்பத்தால் முன்னேறியவர்கள் தான்.
நேரம் இல்லாததால் தினகரனை சென்று சந்திக்க முடியவில்லை என கூறியிருந்தார்.
இப்படி, எம்.எல்.ஏக்களும், அமைச்சரும் சசிகலா தரப்பை ஆதரித்து பேசுவதை முதல்வர் விரும்பவில்லையாம்.
இது குறித்து எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசி வரும் எடப்பாடி, இவர்கள் என்ன நினைத்துக்கொண்டு இவ்வாறு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் செயலில் இறங்கினால் தாங்க மாட்டார்கள் என கோபப்பட்டதுடன், நான் நினைத்தால் ஆட்சியை கலைத்துவிடுவேன் என கொந்தளித்தாராம்.
மேலும், சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக பேசும் அமைச்சரின் இலாகாவை பறித்து விட்டால் மற்றவர்களும் அமைதியாக இருப்பார்கள் என எடப்பாடி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.