ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ (வயது 83). இவர் வயதின் காரணமாகவும், உடல்நலப்பிரச்சினைகள் காரணமாகவும் தன்னால் அரச பதவிக்குரிய கடமைகளை செய்ய முடியவில்லை என்று கடந்த ஆண்டு தெரிவித்தார்.
மேலும் பதவி விலகவும் அவர் விருப்பம் தெரிவித்து நாட்டு மக்களுக்கு டெலிவிஷனில் உரை ஆற்றினார்.
ஜப்பானில் கடந்த 200 ஆண்டுகளில் எந்தவொரு மன்னரும் பதவி விலகியது இல்லை. எனவே மன்னர் அகிஹிட்டோ பதவி விலகுவது தொடர்பாக ஜப்பான் அரசு சட்ட மசோதா ஒன்றை தயாரித்து, மந்திரிசபையின் ஒப்புதலைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து இந்த சட்ட மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவுக்கு பாராளுமன்றம் தனது ஒப்புதலை வழங்கி விட்டது. இதையடுத்து மன்னர் பதவி விலகுவதற்கான நடைமுறைகள் தொடங்கி விடும்.
மன்னர் அகிஹிட்டோவுக்கு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந் தேதி 85 வயது பிறக்கிறது. அந்த பிறந்தநாளைக் கொண்டாடி விட்டு அவர் பதவி விலகுவார் என தகவல்கள் கூறுகின்றன.
அவர் பதவி விலகியதும், மன்னரின் ‘கிறிசாந்தமம்’ சிம்மாசனம் பட்டத்து இளவரசர் நருஹிட்டோவிடம் ஒப்படைக்கப்படும்.