பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பெண்கள் பிரிவில் மகுடம் யாருக்கு?

பிரெஞ்ச் ஓபன் டென்னிசில், நேற்று முன்தினம் இரவு நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 4-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-4, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இந்த நிலையில் பெண்கள் ஒற்றையரில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் சிமோனா ஹாலெப்பும் (ருமேனியா), 47-ம் நிலை வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோவும் (லாத்வியா) இன்று மல்லுகட்டுகிறார்கள். இருவரும் இதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை.

இதில், அனுபவம் வாய்ந்த 25 வயதான சிமோனா ஹாலெப்புக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. அவர் வாகை சூடினால், கோப்பையுடன் தரவரிசையில் முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ அரியணையிலும் ஏறி விடுவார். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இறுதி சுற்றுக்கு வந்த முதல் லாத்வியா நாட்டவர் என்ற சாதனைக்குரிய 20 வயதான ஆஸ்டாபென்கோவும் வரலாறு படைக்க தீவிரமாக இருக்கிறார்.

இதனால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் நேர் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.15 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும். இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் எச்.டி. சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.