அரைஇறுதிக்கு முன்னேறுமா ஆஸ்திரேலியா?: இங்கிலாந்துடன் இன்று மோதல்

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘ஏ’ பிரிவில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் பர்மிங்காமில் சந்திக்கின்றன. தனது முதல் இரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற இங்கிலாந்து ஏற்கனவே அரைஇறுதியை உறுதி செய்து விட்டது.

ஆஸ்திரேலிய அணியின் இரண்டு ஆட்டங்களும் மழையால் பாதியில் கைவிடப்பட்டன. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது தோல்வியின் விளிம்பில் இருந்து மழை ஆஸ்திரேலியாவை காப்பாற்றியது. அதே நேரத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறும் நிலையில் இருந்து மழை அந்த அணிக்கு குந்தகம் விளைவித்தது.

2 புள்ளியுடன் உள்ள ஆஸ்திரேலியா இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதிக்கு முன்னேறும். தோற்றாலோ அல்லது மழையால் பாதியில் ரத்தானாலோ சொந்த ஊருக்கு மூட்டையை கட்ட வேண்டியது தான். மிக முக்கியமான ஆட்டம் என்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் முழுமூச்சுடன் வரிந்து கட்டி நிற்பார்கள்.

அதே சமயம் அரைஇறுதியை எட்டி விட்டாலும் இந்த ஆட்டத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ளமாட்டோம், ஆஸ்திரேலியாவை போட்டியை விட்டு வெளியேற்ற முயற்சிப்போம் என்று இங்கிலாந்து வீரர்கள் சூளுரைத்து இருக்கிறார்கள்.


பயிற்சியில் ஆஸ்திரேலிய வீரர் வார்னர், கேப்டன் ஸ்டீவன் சுமித்.

இன்றைய ஆட்டத்திற்கும் மழை ஆபத்து உள்ளது. காலையில் பலத்த மழையும், பிற்பகலில் அவ்வப்போது மழை தூரல் விழக்கூடும் என்று பர்மிங்காம் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆக, ஆஸ்திரேலியாவின் வாய்ப்பு இப்போது வருணபகவானின் கையில் உள்ளது என்பது மறுப்பதற்கு இல்லை.

இவ்விரு அணிகளும் இதுவரை 136 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 80-ல் ஆஸ்திரேலியாவும், 51-ல் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் ‘டை’ ஆனது. மூன்று ஆட்டத்தில் முடிவு இல்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் (கேப்டன்), ஹென்ரிக்ஸ், மேக்ஸ்வெல், கிறிஸ் லின் அல்லது டிராவிஸ் ஹெட், மேத்யூ வேட், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ், ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, அடில் ரஷித், பிளங்கெட், மார்க்வுட், ஜாக் பால்.