வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் எவரும் கருத்து வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
அத்துடன், வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வுக்கு முன்னதாக எதிர்வரும் 12ஆம்திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாண சபையின் இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற இரண்டு பங்காளிக் கட்சிகள் (ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
இருப்பினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், புளொட்டும் இது தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் எந்தக் கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வடக்கு மாகாண சபையின் விசேட அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில், விசாரணை அறிக்கை தொடர்பில் விவாதம் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக எதிர்வரும் 12ஆம் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கூடிப் பேசவுள்ளனர் எனத் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.