கோவில்களில் சுவற்றுக்கு காவி நிறம் பூசுவது ஏன்?

கேள்வி: பல கோவில்களில் சுவற்றுக்கு காவி நிறத்தில் வர்ணம் பூசுகின்றனர். பல முனிவர்களும், துறவிகளும் காவி நிறத்தில்தான் உடை அணிகின்றனர். இந்து சமயத்தில் காவி நிறத்திற்கு இத்தனை முக்கியத்துவம் ஏன்?

சத்குரு: காவி நிறம் இந்து சம்பிரதாயத்திற்கு மட்டும் சேர்ந்தது அல்ல. இந்த மண்ணின் நிறம் காவி. ஒரு துறவி எந்தவித சாயமும் பயன்படுத்தவில்லை. அவர் தன் உடைகளை மண்ணில் தோய்த்து உடுத்திக் கொள்கிறார். அதனால்தான், அவரது உடை காவி நிறத்தில் இருக்கிறது.

அதேபோன்று காலங்காலமாக, இங்குள்ள கோவில்களுக்கும் வர்ணங்கள் ஏதும் பூசவில்லை. வெறும் செம்மண்னை குழைத்துப் பூசினர். குறிப்பாக தமிழ்நாட்டில், கோவில்களுக்கு எந்த வர்ணங்களையும் பயன்படுத்தவில்லை, செம்மண்ணையே பயன்படுத்தினர். ஆனால் தற்போதோ, வாஸ்து பெயிண்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று சொல்லி அசிங்கம் செய்துவிட்டார்கள். ஈஷா யோக மையத்தில் கூட நாம் வர்ணத்திற்கு செம்மண்ணையே பயன்படுத்துகிறோம். இங்குள்ள அத்தனை கட்டிடங்களும் செம்மண்

குறிப்பாக சொல்வதென்றால், நம் உடலே மண்ணிலிருந்து உருவானதுதான். எனவே உடல்நிலையில், மனநிலையில் நாம் ஆரோக்கியமாக இருக்க, மண்ணுடன் தொடர்பில் இருப்பது அவசியம். இந்தத் தொடர்பை உறுதிசெய்துக் கொள்வதற்காக நாம் பலவிதமான முறைகளை உருவாக்கி இருக்கிறோம். அதில் குறிப்பாக நம் கலாச்சாரத்தை சற்றே பின்னோக்கிப் பார்த்தால், தரையில் அமர்ந்து உணவருந்துவது, தரையில் உறங்குவது போன்ற பழக்கங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. இதன்மூலம், நிலத்துடனான தொடர்பை நம்மால் ஆழப்படுத்திக் கொள்ளமுடியும்.

இந்த தொடர்பை ஆழப்படுத்திக் கொள்வதற்காகத்தான் மண்ணில் தோய்த்த ஆடைகளை துறவிகள் அணிந்தார்கள். இதனால் நம் உடலில் எப்போதும் மண் ஒட்டிக்கொண்டிருக்கும்.எந்நேரத்திலும் மண்ணுடன் தொடர்பில் இருப்போம். இதனால், பூமித்தாயின் கருவில் இருக்கக்கூடிய உணர்வு ஏற்படும்.

அத்தகைய உணர்வுடன் இருக்கும்போது, இவ்வுடல் எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.கருவில் இருந்தால் புத்துணர்ச்சி தானே? இரு செல் உயிராய் இருந்த நாம் இன்று இவ்வளவு பெரிய உயிராய் வளர்ந்ததற்குக் காரணமே அந்தக் கருவறைதானே? எனவே, அப்படியரு புத்துணர்ச்சி நமக்குள் ஏற்பட வேண்டுமென்றால், நாம் தொடர்ந்து இந்த பூமித்தாயின் கருவறையில் இருக்க வேண்டும்.

மண்ணைத்தான் நாம் உணவாய் உண்கிறோம், மண்ணையே நம் ஆடையில் பூசிக் கொள்கிறோம், அதனையே நம் சுவர்களிலும் வர்ணமாய் அடிக்கிறோம். இப்படி செய்து நாம் மண்ணுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதால், நம் உடலும் மனமும் உறுதியான நிலையை அடைகிறது. இந்த புரிதலில்தான், இப்பழக்கத்தை உருவாக்கினார்கள்.காவி இந்து சம்பிரதாயத்தின் நிறம் என்று சொல்வதைவிட இம்மண்ணின் நிறம் என்று நாம் சொல்லலாம். என்ன செய்வது, உண்மை அதுதானே?