சாவகச்சேரி பிரதேச செயலகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள நாவற்குழி பகுதியில் அனுமதி இன்றி நிர்மாணிக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைக்கு எதிராக சாவகச்சேரி பிரதேச சபையினரால் இன்று சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ் வழக்கு எதிர்வரும் 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி ஶ்ரீநிதி நந்தசேகரம் வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.
இதே போல் கடந்த மாதம் மட்டுவில் தேவாலய வீதியிலிருந்து பனையடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் சந்தியில் முன்னர் நின்ற மரத்தின் கீழ் சூலம் வைத்து இந்து மக்கள் வழிபட்டு வந்தனர்.
வீதி அகலிப்புக்காக அண்மையில் மரம் அகற்றப்பட்டதையடுத்து அந்த இடத்தில் ஊர் மக்கள் சிலர் சந்தியில் சிறிய கட்டடம் அமைத்து பிள்ளையார் சிலையை கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி நிறுவி வழிபட்டு வந்தனர்.
புதிதாக கட்டடம் அமைக்கப்பட்ட இடத்தின் காணி உரிமையாளர் கட்டடத்தை அப்புறப்படுத்துமாறு பிரதேச சபைக்கு முறையிட்டார்.
அனுமதி பெறப்படாமல் கட்டடம் அமைக்கப்பட்டமை எதிராக சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் சாவகச்சேரி பிரதேச சபை வழக்குத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
வழக்கைப் பரிசீலனை செய்த நீதிபதி பிரதேச சபையின் அனுமதியின்றி ஆலயக் கட்டடமாயினும் அமைக்கக்கூடாது என அனுமதி இன்றி கட்டப்பட்ட இந்து ஆலயங்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.