“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனைவருக்கும் உரிமை உள்ளது’
இலங்கையில் நடைபெற்ற போரின்போது உயிரிழந்த தமது உறவினரை நினைவுகூரும் அனைத்து உரிமைகளும் அவர்களின் குடும்பத்தினருக்கு இருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
‘உயிரிழந்த நபர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராக இருந்த காரணத்தை வைத்து இந்த உரிமையை மறுப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல’ என்றும் இந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
‘நாட்டின் தேசிய ஓற்றுமை மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அந்த குடும்பங்களுக்கு இருக்கின்ற இறந்தோரை நினைவுகூரும் உரிமை மற்றும் அந்த நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் பாதுகாப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்” என இலங்கை மனித உரிமைகள் ஆணையம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மாதம் நினைவு கூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின்போது அங்கு உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு தூபி அமைத்தல் உள்ளிட்ட சில ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.