சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம்! வெளி நியமனங்களை தவிர்க்குமாறு வடக்கு ஆளுனர் உத்தரவு

வவுனியாவில் 38 வது நாளாக சுகாதாரத் தொண்டர்கள் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வவுனியா பிராந்திய சுகாதாரப்பனிமனை முன்பாக கொட்டகை அமைத்து போராட்டம் நடத்திவரும் தொண்டர்கள் இன்று 10-06-2017 கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

கடந்த 31-05-2017 அன்று வடக்கு மாகாண ஆளுனரை சந்தித்து எங்கள் பிரச்சனை தொடர்பாக எடுத்துரைத்ததன் பயனாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சிற்கு வெளிமாவட்டதிலிருந்து சுகாதாரத் தொண்டர்களை உள்வாங்க வேண்டாம் என்பதுடன்,

சுகாதாரப்பனிமனையூடாக தொண்டர்களை உள்வாங்குமாறும் அறிவுறுத்தி 05-06-2017 வடக்கு மாகாண ஆளுநர் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதன் பிரதி ஒன்றும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த சுகாதாரத் தொண்டர்கள்,

தொண்டர்களுக்கான வெற்றிடங்கள் இல்லை என்று வடக்கு மாகாண சுகாதார அமைச்சு கூற முடியாது பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலைசெய்பவர்களுக்கு அவர்களின் மாவட்டங்களில் பணியாற்ற அனுமதிப்பதோடு, சிற்றூழியர்களாக இருந்து பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்களின் வெற்றிடங்களும் நிரப்பப்படாமல் காணப்படுகிறது.

சாக்கு போக்கு கூறாமல் சுகாதாரத் தொண்டர்களின் கோரிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண சபை சாதகமான முடிவை அறிவிக்க வேண்டும் என தெரிவித்தனர்.