ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அ.தி.மு.க.வுக்கு சசிகலா தலைமை தாங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க.வின் ஒரு பிரிவினர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
ஜெயலலிதாவின் வாரிசு நீங்கள்தான். அவரது இடத்தில் இருந்து கட்சியை நீங்களே வழி நடத்தி செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக தினமும் தி.நகரில் உள்ள அவரது வீட்டு முன்பு அ.தி.மு.க.வினர் கூடி தீபாவுக்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் தன்னுடன் சேர்ந்து பணியாற்றுமாறு தீபாவை கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதை ஏற்காமல் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்கிற அமைப்பை தீபா தொடங்கினார். அ.தி.மு.க. தீபா அணி என்று இந்த அமைப்பு அழைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். இதன் பின்னர் அடிக்கடி அறிக்கை வாயிலாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் ஆகியோரை தீபா கடுமையாக சாடினார்.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சென்னை போயஸ் கார்டனில் உள்ள வீடு யாருக்கு சொந்தம் என்கிற கேள்வி எழுந்தது.
ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டன் வீட்டில் வசித்து வந்த சசிகலா அவரது மரணத்திற்கு பிறகும் அங்கேயே வசிக்க தொடங்கினார். இது சசிகலா எதிர்ப்பாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபாவுக்கும், அவரது சகோதரர் தீபக்குக்கும் ஜெயலலிதாவின் சொத்துக்கள் சொந்தமாக இருக்க முடியும். சசிகலா எப்படி அதற்கு சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்வியும் எழுந்தது.
ஆனால் சசிகலா குடும்பத்தினரே தொடர்ந்து போயஸ் கார்டனில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் வீட்டில் யாரும் வசிக்க தயங்கினர். இதனால் ஆள் இல்லாத வீடாக அது மாறியது.
இதனால் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது போலீஸ் பாதுகாப்புடன் எப்போதும் பரபரப்பாக காணப்படும் போயஸ் கார்டன் களை இழந்தது.
இதனை தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தில் தனியார் பாதுகாவலர்களே பணியில் உள்ளனர். வீட்டில் யாரும் வசிக்காத நிலையில் ஒரு சில பணியாளர்களே அங்கு உள்ளனர்.
இதற்கிடையே சொத்து குவிப்பு வழக்கில் போயஸ் கார்டன் இல்லமும் சிக்கியுள்ளது. இதனால் அது முடக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சசிகலா சிறை சென்ற பின்னர் கடந்த 5 மாதங்களாக போயஸ் கார்டன் இல்லம் கேட்பாரற்ற நிலையிலேயே காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தீபா தனது சகோதரர் தீபக்குடன் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு திடீரென சென்றார். காலை 10 மணியளவில் தனது காரில் சென்று இறங்கிய தீபா நேராக ஜெயலலிதாவின் வீட்டிற்குள் செல்ல முயன்றார்.
ஜெயலலிதாவின் வீட்டில் பிரமாண்டமான இரும்பு கேட் போட பட்டிருக்கும். அதன் வழியாக தீபா வீட்டிற்குள் செல்ல முயன்றார். ஆனால் அங்கிருந்த தனியார் பாதுகாவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் தீபா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் சிறிது நேரத்தில் தீபக்கும் அங்கே விரைந்து சென்றார். அவரையும் தனியார் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் தீபக்கும், தீபாவும் ஜெயலலிதாவின் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் தீபாவின் கணவர் மாதவனும் போயஸ் கார்டனுக்கு விரைந்தார். அவரும் தடுத்து நிறுத்தப்பட்டார்.
பின்னர் கடும் வாக்குவாதத்திற்கு பிறகு மாதவன் தீபா இருக்கும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார். 3 பேரும் ஜெயலலிதாவின் வீட்டு வாசலிலேயே அமர்ந்துள்ளனர்.
தீபா தனது குடும்பத்தினருடன் போயஸ் கார்டன் வீட்டில் குடியேற முயன்ற தகவல் கிடைத்ததும் அங்கு ஏராளமான போலீசார் விரைந்து சென்றனர். போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்லும் சாலையில் 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. தடையை தாண்டி சென்ற தனியார் தொகைக்காட்சி நிருபர் மற்றும் கேமரா மேன் ஆகியோர் தனியார் பாதுகாவலர்களால் தாக்கப்பட்டனர். இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவி வருகிறது.