தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணிக்காக மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று கூறி இருக்கிறார். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி, குடிமராமத்து பணிக்காக செலவு செய்யப்பட்டு இருந்ததால் அது பயன் உள்ளதாக அமையும் ஆனால் இது வரையில் அப்படி செலவு செய்யப்பட்டதாக தெரியவில்லை.
இந்த ஆட்சியை காப்பாற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு கமிஷன் தரப்படுவதற்கு இந்ததொகை ஒதுக்கப்பட்டு உள்ளதாக மக்களிடம் கேள்வி எழுந்து உள்ளது.
நான் அ.தி.மு.க ஆட்சியை கவிழ்க்க பல்வேறு முயற்சிகள் எடுப்பதாக கூறுகிறார்கள். ஒரு துளி அளவு கூட அப்படிப்பட்ட செயலில் நான் ஈடுபடவில்லை.
தற்போது ஆட்சியை அவர்களே கவிழ்த்து கொள்கிற சூழ்நிலை இருக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைய வேண்டும் என்ற போட்டி மட்டும் அல்ல, அவர்களுக்கு உள்ளே பல போட்டா போட்டி நிலவுகிறது.
தினகரன் அணி, பழனிசாமி அணி, ஓ. பன்னீர் செல்வம் அணி, தீபா அணி என்று பல அணிகளாக பிரிந்து இருக்கிறார்கள்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, காந்தி பற்றி கூறிய கருத்தை தி.மு.க வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் பாலில் கலப்படம் என்று முதலில் கூறினார்கள். அதன் மீது உரிய நடவடிககை எடுக்கப்பட்டதா? இதில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட்டு இருக்கிறார்களா?.
இது ஒரு புறம் இருக்க இப்போது அரிசி, முட்டை, சர்க்கரை போன்றவற்றில் பிளாஸ்டிக் கலப்படம் இருப்பதாக செய்திகள் வருகிறது. இதனை ஆட்சியில் இருப்பவர்கள் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.