பிரிட்டனில் சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது. மொத்தம் உள்ள 650 இடங்களில் கன்சர்வேட்டிவ் கட்சி 318 இடங்களிலும், தொழிலாளர் கட்சி 262 இடங்களிலும் வென்றது. ஆட்சியமைப்பதற்கான மெஜாரிட்டி எந்தக் கட்சிக்கும் கிடைக்காததால், வடக்கு அயர்லாந்தின் டியுபி கட்சியுடன் கூட்டணி அமைத்து கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. தெரசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் தேர்தலில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு பொறுப்பேற்று பிரதமர் தெரசா மேயின் நெருங்கிய ஆலோசகர்களான திமோதி மற்றும் ஹில் ஆகியோர் இன்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். கூட்டுத் தலைவர்களில் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக விளங்கிய இருவரும் மிகப்பெரிய வெற்றி பெறுவோம் என்று பிரதமரிடம் கூறி வந்த நிலையில், பெரும்பான்மை பெற முடியவில்லை.
இதற்கு முக்கிய காரணம் தேர்தல் அறிக்கைதான் என்று கூறப்படுகிறது. கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்களுக்கு எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். தேர்தல் அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு எம்.பி. வலியுறுத்தினார். எனவே, இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
எனினும், பிரதமர் தெரசா மே மிகச்சிறந்த பிரதமர் என்றும் அவர் பிரதமராக தொடர்ந்து சேவை செய்வார் என்றும், ராஜினாமா செய்த ஹில் தெரிவித்துள்ளார்.