இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தல் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. அதில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாராளுமன்றத்தில் மெஜாரிட்டி பெற 326 இடங்கள் பெற வேண்டும். ஆனால் கன்சர்வேடிவ் கட்சி 318 இடங்களே பெற்றது.
எனவே கன்சர்வேடிவ் கட்சி கூட்டணி அரசு அமைக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 2015-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் டேவிட் கேமரூன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மைக்கும் கூடுதலாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என பொது வாக்கெடுப்பில் மக்கள் தீர்ப்பு அளித்தனர். ஆனால் வெளியேறக் கூடாது என்ற கருத்தில் இருந்த டேவிட் கேமரூன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவரது அரசில் நிதி மந்திரியாக இருந்த தெரசா மே பிரதமரானார்.
கடந்த 1979-ம் ஆண்டு கன்சர்வேடிவ் கட்சியின் மார்க்ரெட் தாட்சர் முதல் பெண் பிரதமரானார். இவர் தலைமையில் இங்கிலாந்து வளர்ச்சி அடைந்தது. முடிவுகள் எடுத்து நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். எனவே அவர் இரும்பு பெண்மணி என அழைக்கப்பட்டார்.
அதேபோன்று தெரசாமே பிரதமரானதும் அவரையும், மக்கள் இரும்பு பெண்மணி என அழைத்தனர். மார்க்ரெட் தாட்சரை போன்ற தோற்றத்துடன் இருக்கும் தெரசா மே அவரைப் போன்றே நிர்வாகத் திறமையுடன் செயல்படுவார் என எதிர்பார்த்தனர்.
பொதுவாக இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கான ஆயுட்காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. அதற்கு முன்னதாகவே தெரசா மே தேர்தலை அறிவித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி கிடைக்கவில்லை. மாறாக தோல்வி என இல்லாமல் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. சில இடங்கள் குறைவாக கிடைத்துள்ளன.
எனவே உதிரி கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து மீண்டும் பிரதமராக தெரசா மே முடிவு செய்துள்ளார். அதற்கு ஆளும் கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசியல் ஆலோசகர்களின் பேச்சை கேட்டு முன்னதாகவே தேர்தல் நடத்தி கட்சிக்கு பின்னடைவை விலை கொடுத்து வாங்கிய தெரசா மே பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதை கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர்களே நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் தெரசா மே அரசியல் ஆலோசகர்கள் நிக் நிமோதி, பயோனா ஹில் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அவர்களை போன்று தெரசா மேயும் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எதிர்ப்பை மீறி தெரசா மே பிரதமரானாலும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன. விரைவில் அவர் பதவி விலக நேரிடும் எனவும், எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதை பார்க்கும்போது இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்பட்ட மார்க்ரெட் தாட்சருக்கு ஏற்பட்ட நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியினரின் எதிர்ப்பை மீறி பிரதமர் பதவியில் தொடர்ந்த தாட்சர் இடையில் பதவி விலகினார். அதே போன்ற நிலை இவருக்கும் ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க தெரசா மேவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவது குறித்த பேச்சுவார்த்தையை விரைவுபடுத்த வேண்டும் என ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார். எனவே தெரசா மேயின் பிரதமர் பதவி தலை மேல் தொங்கும் கத்தி போன்று உள்ளது.