ஈரான்: பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – முக்கிய குற்றவாளி சுட்டுக்கொல்லப்பட்டான்

ஈரான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்தி 17 பேர் மரணத்திற்கு காரணமாக இருந்த ஐ.எஸ் தீவிரவாதி பாதுகாப்பு படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்டான்.

ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றத்தின் மீது ஐ.எஸ் இயக்க தீவிரவாதிகள் கடந்த புதன் கிழமை காலை திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், அங்குள்ள மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம் அருகே மறைந்த புரட்சியாளரும் மதகுருவுமான கோமெனியின் கல்லறை மாடம் உள்ளது. அங்கு புகுந்த தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

இந்த இரண்டு தாக்குதல்களில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் உள்ளிட்ட 17 பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த கோர தாக்குதலுக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளியை பாதுகாப்பு படையினர் நேற்று சுட்டுக்கொன்றதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி மக்மூத் அலாவி செய்தி நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளார்.