பிரேசில் நாட்டில் அதிபராக இருந்த டில்மா ரூசெப் முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து துணை அதிபராக இருந்த மைக்கேல் டெமர் புதிய அதிபரானார்.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டில்மா ரூசெப்புக்காக தேர்தல் நிதி திரட்டுவதில் இவர் முறைகேடு செய்ததாக புகார் கூறப்பட்டது.
மேலும், ஊழல் புகார்களும் தெரிவிக்கப்பட்டன. அதை தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் டெமர் பதவி விலக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறை கோர்ட்டில் மைக்கேல் டெமர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை என கூறி விடுதலை செய்யப்பட்டார். அதை தொடர்ந்து அவரது அதிபர் பதவி தப்பியது. தீர்ப்பு வாசிக்கும் போது கோர்ட்டுக்குள் நிருபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.