நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர் கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் `தங்கல்’. சீனா மக்களால் விரும்பி பார்க்கப்பட்டு வரும் `தங்கல்’ படம் தற்போது வரை ரூ.1823 கோடியை வசூல் செய்திருக்கிறது. மேலும் வசூல் சாதனையை படைக்க இருக்கிறது.
`தங்கல்’ படத்தில் சைரா வாசிம், கீதா போகத் என்ற இளம் வீராங்கணையாக நடித்திருந்தார். ஆண்களுடன் குஸ்தி விளையாடும்படியாக அவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சைரா, தனது தோழியுடன் நேற்று இரவு தால் ஏரி வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். வேகமாக சென்ற அந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஏரியின் சுவரை உடைத்துக் கொண்டு நின்றது. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்தவர்கள் கூறிய தகவலின் படி, கார் வேகமாக சென்று ஏரியின் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு நின்றதாக கூறினர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த கார் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரது என்பது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.