வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘வடசென்னை’. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. மீண்டும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது இப்படத்தில் சமுத்திரகனி மூன்று கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. தனுஷுக்கு இணையாக சமுத்திரகனியின் கதாபாத்திரமும் செதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சமுத்திரகனி தற்போது ரஜினி நடிக்கும் ‘காலா’ படத்திலும் ரஜினி கூடவே வருவதுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘வடசென்னை’ முழுக்க முழுக்க வடசென்னையை மையப்படுத்திய கதையாக உருவாகவிருக்கிறது. முதல்கட்ட படப்பிடிப்பு முழுவதும் ஒரு ஜெயில் செட்டுக்குள்ளேயே படமாக்கியுள்ளனர். படத்தில் இந்த ஜெயில் செட்டுக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் மிகவும் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்த கதாபாத்திரத்தில் தற்போது அமீர் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.