விக்ரம் நடிப்பில் கடந்த 2003-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹரி இயக்கியிருந்த இப்படத்தில் விக்ரம் போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் விக்ரமின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றுகூட சொல்லலாம்.
தற்போது, இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க விக்ரமும் ஹரியும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். ‘சாமி-2’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கவிருக்கிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து விலகி, ஹீரோவாக பல படங்களில் நடித்து வரும் பாபி சிம்ஹா தற்போது இந்த படத்தின் மூலம் மீண்டும் வில்லனாக களமிறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பாபி சிம்ஹாவுக்கு வில்லன் கதாபாத்திரம்தான் அவருக்கு தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்துக் கொடுத்தபிறகு ‘சாமி-2’ வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘சாமி-2’ படத்தை சிபு தமீன்ஸ் தயாரிக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘இருமுகன்’ படத்தையும் தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.