வடக்கு கல்வி அமைச்சர் மீதான சாட்சியங்கள் பொய் : ப.அரியரத்தினம் சீற்றம்!!

வடமாகாண அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமைச்சர்களைப் பதவி விலக வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ள விசாரணைக்குழு பொய்யான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

தான் கூறாத விடயங்களைத் தான் கூறியதாகப் பதிவுசெய்து அதில் தனது பெயரைப் பயன்படுத்திப் பதிவுசெய்துள்ளதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசக் கிளையின் வருடாந்த மாநாடும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று மாலை 3.00 மணியளவில் பளை சந்தைக்கட்டிடத் தொகுதியின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த மாநாடு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தைச் சேர்ந்த உறுப்பினர்களால் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலுராசா, வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் மீது பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டும் உண்மைக்குப் புறம்பான பல விடயங்களைக் குறிப்பிட்டும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடமாகாண அமைச்சர்களைப் பதவி விலக வேண்டும் என விசாரணைக்குழு வலியுறுத்துவதைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

வடமாகாண அமைச்சர்களைப் பதவி விலக்குவதற்காக விசாரணைக்குழு அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நீதியான முறையில் அணுகி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யான உண்மைக்குப் புறம்பானவை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை வடக்கு மாகாண முதலமைச்சர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து எம்மை எதுவித கருத்தும் கூறக்கூடாது என்ற கண்டிப்பான அறிவுறுத்தல்கள் எமக்கு வழங்கப்பட்டுள்ளன. நான் இது குறித்து கருத்துக் கூறமுடியாத நிலையிலுள்ளேன்.

ஆனாலும் கல்வி அமைச்சர் குருகுலராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நான் முன்வைத்துள்ளதாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பான பொய்.

நான் இப்படியான குற்றச்சாட்டை அந்த விசாரணைக்குழுவிடம் வழங்கவில்லை இது உண்மைக்குப் புறம்பான என்மீது பழிசுமத்துவதற்கானதாகவே நான் கூறுகின்றேன்.

கல்வி அமைச்சர் குருகுலராசாவுக்கு எதிராக நான் குற்றச்சாட்டுக்களை விசாரணைக்குழுவிடம் வழங்கியுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் மாகாணசபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிச் செல்கின்றேன்.

விசாரணைக்குழு எனது பெயரை நான் கூறாத விடயங்களைக் கூறியதாகச் சுட்டிக்காட்டியுள்ளமையானது என்மீது சேறு பூசி எனக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதாகவே நான் கருதுகின்றேன்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டது ஒரு குற்றச்சாட்டாகவே ஏற்றுக்கொள்ள முடியாது. இது பற்றி எங்களை வாய்திறக்கக் கூடாது என்ற கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்கள் இது பற்றி இதற்கு மேல் நான் கூற விரும்பவில்லை.

வடமாகாண அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்தி அவர்களைப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும் விசாரணைக்குழு சரியாகச் செயற்பட்டுள்ளதா? வேண்டுமென்றே வடமாகாண அமைச்சர்கள் மீது குற்றம் சாட்டுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

வடமாகாண சபை உறுப்பினரது பெயரைக் குறிப்பிட்டு தான் கூறாத விடயங்களை விசாரணைக்குழுவின் அறிக்கையில் சேர்த்துள்ளதுள்ளமையிலிருந்தே இந்த விசாரணைக் குழு மீது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் எழுகின்றமையும் இக்குழு தமிழ் மக்களைக் குழப்பத்தில் உறைய வைத்துள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் பசுபதி அரியரத்தினம் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பூநகரிப் பிரதேசக் கிளையின் வருடாந்த மாநாட்டின் போதும் வடமகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் வேண்டுமென்றே புனையப்பட்டவையாகத் தென்படுவதாகவும் அவற்றின் உண்மை நிலையைக் கண்டறியுமாறு கோரியும் அங்கு கூடியிருந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையும் அதனையும் உரியவர்களுக்கு வெகு விரைவில் அனுப்புவதாகவும் முடிவுகள் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.