கொலைக் குற்றங்களை ஏற்றுக்கொள்ளும் கோத்தபாய!

மகஸின் சிறைச்சாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு, ரத்துபஸ்வலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு ஆகிய இரு சம்பவங்களும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமையவே இடம்பெற்றது என இடதுசாரி நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.

குற்றமிழைத்தவர்களைவிட குற்றங்களுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் இடதுசாரி நிலையம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் இடதுசாரி நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா மேலும் கூறியுள்ளதாவது,

“வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டமை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னரே உறுதியானது. அதற்கு முன்னர் அது ஒரு விபத்து என்றே கூறப்பட்டது. இது தொடர்பில் விசாரணை செய்ய அப்போதைய மஹிந்த ஆட்சியாளர்கள் தவறிவிட்டனர்.

மகஸின் சிறைச்சாலையில் பெயர் குறிப்பிட்டு 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அது தொடர்பில் வழக்கு விசாரிக்கப்பட்டதா? ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே? கோத்தபாய ராஜபக்ஷவின் தேவைப்பாட்டுக்கு அமையவே படுகொலை செய்யப்பட்டார்கள். அது தொடர்பில் எவரும் பேசவில்லை.

ஒரு குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செய்த குற்றங்களை மூடிமறைக்க முயன்றனர். எனினும், அது தொடர்பிலேயே முதலில் விசாரணை செய்ய வேண்டும். அரசின் வேகம் போதவில்லை. அது தொடர்பில் எமக்குப் பிரச்சினை இருக்கின்றது.

அதுபோல் கடந்த காலங்களில் இடம்பெற்ற கடத்தல்களுக்கு நான் மட்டும் பொறுப்பல்ல எனவும், முன்னாள் இராணுவத் தளபதி உள்ளிட்டவர்களையும் விசாரிக்க வேண்டும் எனவும் கோத்தபாய கூறுகின்றார். ஆகவே, தான் குற்றவாளி என்பதை அவர் நிராகரிக்கவில்லை.

கடந்த காலத்தில் ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூடு தொடர்பில் கம்பஹா நீதிமன்றில் முன்னாள் பிரிகேடியர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “இது எனது தனிப்பட்ட விருப்பத்தில் நடைபெற்ற விடயமல்ல. எனது தேவைக்காக மேற்கொண்ட விடயமல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பொறுப்புக்கூற வேண்டியது நானல்ல. எனக்குக் கிடைத்த உத்தரவுக்கு அமைய நான் செயற்பட்டேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த உத்தரவைப் பிறப்பித்தது யார்? அப்போது பாதுகாப்பு அமைச்சில் பொறுப்பாக இருந்தவர் கோத்தாபய ராஜபக்ஷ. அப்போதைய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க. பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ. எமக்குத் தெரியும் மஹிந்த ராஜபக்ஷா, கோத்தபாய ராஜபக்ஷவிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் செய்யமாட்டார். ஆகவே, கோத்தபாயவின் அறிவுறுத்தல் இல்லாமல் ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்த வாய்ப்பில்லை. கோத்தபாயவுக்கு ஏன் இவ்வளவு பயம்? ஏன் அது தொடர்பில் விசாரணை செய்ய இந்த அரசாசு தயங்குகின்றது?

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கைது செய்யும் பொலிஸாரால் இன வன்முறை மற்றும் மத வன்முறையைத் தூண்டும் ஞானசார தேரரைக் கைதுசெய்ய முடியாமல் போயுள்ளது.

400 இற்கும் மேற்பட்ட பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. எனினும், ஞானசார தேரரைப் பொலிஸார் இன்னமும் கைது செய்யவில்லை. ஆனால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் மாணவர்களைக் கைது செய்ய அவர்களால் முடியும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தவும், அவர்களை 24 மணித்தியாலங்களுக்குள் கைது செய்யவும் அவர்களால் முடியும். ஞானசார தேரரின் பின்னால் இருப்பது யார்? பொலிஸார் என்ன செய்கின்றார்கள் என அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் கேட்கின்றோம்” – என்று தெரிவித்துள்ளார்.