போர்க்குற்ற விவகாரங்களில் வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது! ரவி கருணாநாயக்க

வெளிநாட்டு தலையீடுகளுக்கு இடமளிக்கப்படாது என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுச் சக்திகள் தலையீடு செய்ய அனுமதியளிக்கப்படாது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளையோ அல்லது கண்காணிப்பாளர்களையோ இணைத்துக் கொள்ள எதிர்பார்க்கவில்லை.

கடந்த 2012ம் ஆண்டில் கடந்த அரசாங்கம் பல்வேறு சர்வதேச நிபந்தனைகளுக்கு இணங்கியிருந்தது.

இதனால் இலங்கை சர்வதேச ரீதியில் சில விடயங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சர்வதேசத்தின் இலக்காக மாறியிருந்த இலங்கையை அதிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கத்தினால் முடிந்தது.

ஜனநாயகம் முக்கியமானது என கருதும் நாடாக இலங்கையை தற்போது சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், நாட்டின் இறையாண்மை மிகவும் முதன்மையானது என்றே கருதுகின்றேன்.

மனித உரிமை மீறல் விசாரணைகளின் போது சர்வதேச நீதிபதிகள் கண்காணிப்பாளர்களின் பங்களிப்பு இருக்காது.

நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கப் போவதில்லை என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.