பிரிந்து செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வின் இரு அணிகளை இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் முதலில் சசிகலா தலைமையிலும் பின்னர், தினகரன் தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வந்தது.
இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தி, ‘சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.விலிருந்து விலக்கி வைப்போம்’ என்று கூறினார்.
இதனால் தினகரன் தலைமையில் இருந்த இரண்டாவது அணிக்கு, எடப்பாடி பழனிசாமி தலைமை வகித்தார். இதையடுத்து பிரிந்து கிடந்த இரண்டு அணிகள் இணைப்பதற்காக இரு அணிகளிலும் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
ஓ.பி.எஸ் அணியினர், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து அதிகாரபூர்வமாக விலக்கிவைக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இணைப்பு குறித்து பேசுவோம்’ என்று கூறினர்.
ஆனால், இதற்கான நடவடிக்கைகள் முடங்கியதை அடுத்து இரு அணிகளின் இணைப்பு இழுபறியான நிலையில் இருந்தது. இந்நிலையில்தான் பன்னீர்செல்வம் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பதற்கான அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியில் உருவாக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது.
இரு அணிகள் இணைப்பு தேவையில்லை என மக்கள் நினைக்கின்றனர். எனவே மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுகிறது என்றார். மட்டுமின்றி தமிழகத்தில் தற்போது மிகவும் மோசமான முறையில் ஆட்சி நடந்து வருகிறது.’ என்றும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.