“சொத்துக்கு உரிமை கொண்டாடுவது நோக்கம் அல்ல, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே விருப்பம்”, என்று தீபா தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா சென்னை தியாகராயநகர் இல்லத்தில் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
என் சகோதரர் தீபக் சசிகலா குடும்பத்தினருடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. கடந்த சில வருடங்களாகவே எனக்கும்-தீபக்குக்கும் எந்தவித ஒட்டும், உறவும் இல்லாமல் தான் இருந்து வந்தது. இந்தநிலையில் இன்று அதிகாலை திடீரென்று போன் செய்து, ‘எனக்கு நீதான் உறவு. போயஸ் கார்டனுக்கு நீ வரவேண்டும், என்னுடன் பூஜை செய்ய வேண்டும்’, என்று என் மனதை மாற்றும் வகையில் பேசி, போயஸ் கார்டனுக்கு நான் வருகிறேன் என்பதை எனது வாயாலேயே சொல்ல வைத்தார்.
முதலில் என்னை தனியாக வர சொன்னார். நான் அதை ஏற்காமல், ராஜா உள்பட பேரவை நிர்வாகிகளுடன் தான் வருவேன் என்றேன். சரி என்றார். எல்லாவற்றையும் ஏற்று நான் போயஸ் கார்டன் சென்றேன். அங்கே போலீசார் இல்லை, பாதுகாப்பும் கிடையாது.
என்னிடம் தீபக் சற்று திமிருடன் பேச ஆரம்பித்தார். ஒரு இடத்தை காண்பித்து நிற்க சொன்னார்கள். நான் எதற்கு நிற்க வேண்டும் என்றேன். உனக்குத்தான் எந்த வேலையும் இல்லையே என்று எரிச்சலூட்டும் வகையில் பேசினார். அவருடைய பேச்சும், உடல் அசைவும் முற்றிலும் மாறிவிட்டதை உணர்ந்தேன்.
நான் சென்ற சமயம் வீடு பூட்டிக் கிடந்தது. எனவே, கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது சட்ட ரீதியாக நாம் இங்கு வரக்கூடாதே… என்றேன். அதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் வந்தது வேறு விஷயத்துக்காகத் தான். அத்தையின் படத்தை வளாகத்தில் அனாதையாக போட்டு வைத்திருக்கிறார்கள். அதனை நாம் சரி செய்ய வேண்டும் என்றார். சரி என்று கூறி, அந்த போட்டோவை சுத்தப்படுத்தி, மாலை அணிவித்து மரியாதை செய்ய ஒரு மேஜை கேட்டேன்.
அந்த சமயத்தில் திடீரென்று கேமராமேனை அடித்தார்கள். என்ன நடக்கிறது என்று யூகிப்பதற்கு முன்பே அவர் காயம் அடைந்திருந்தார். அவரை அடித்து வெளியே தள்ளினர். தட்டிக்கேட்ட எங்களையும் வலுக்கட்டாயமாக தள்ளிவிட்டு கதவை மூடிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- போயஸ் கார்டன் உங்களுக்கும், தீபக்குக்கும் தான் சொந்தம் என்று கூறினீர்கள்? இதுதொடர்பாக ஏதாவது உயில் எழுதி வைக்கப்பட்டு உள்ளதா?
பதில்:- எல்லாமே என்னிடம் இருக்கிறது. இது எனது பாட்டி வாங்கிய சொத்து என்பதால், இதற்கு ஆவணம் தேவைப்படாது. இதுதொடர்பான உயில் உள்ளது.
கேள்வி:- உங்கள் மீதான தாக்குதலுக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
பதில்:- என் மீது தாக்குதல் நடத்தியதற்கு, தேவையில்லாமல் ஒரு நாடகத்தை அரங்கேற்றியதற்கு சட்டப்படியான நடவடிக்கைகளை நான் மேற்கொள்வேன்.
கேள்வி:- உங்களுக்கு எதிராக நாடகம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?
பதில்:- என்னை கொல்ல சதி நடந்து கொண்டிருக்கிறது.
கேள்வி:- ஜெயலலிதாவின் சொத்தை கைப்பற்ற தீபக் முயற்சிப்பதாக நினைக்கிறீர்களா?
பதில்:- அது எனக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு தவறான சதித்திட்டம் இதன் பின்னணியில் இருப்பது மட்டும் உண்மை. சசிகலா, டி.டி.வி.தினகரன் தான் இதன் பின்னணியில் உள்ளனர். இவர்கள் கூடவே தான் தீபக் சுற்றினார். ஆனால் ஆஸ்பத்திரி விஷயத்தை ஏதாவது வகையில் உங்களிடம் தெரிவித்தது உண்டா? மீடியாவிடம் எந்த ஆதாரமும் கொடுக்கவில்லையே. சசிகலா குடும்பத்துடன் அவர் ஒட்டி உறவாடி வருவதன் காரணமாகத்தான், இத்தனை ஆண்டு காலம் தீபக்கிடம் இருந்து நான் விலகி இருக்கிறேன்.
கேள்வி:- பாட்டி வாங்கிய சொத்துக்கான உயில் உங்களிடம் இருப்பது தீபக்குக்கு தெரியுமா?
பதில்:- அது பற்றி எனக்கு தெரியாது. அவர் நிதானமாக இருந்தால், இதை அவரிடமே கேளுங்கள். ஆனால் இன்றைக்கு அவர் நிதானமாக இல்லை. அவர் குடித்துவிட்டு வந்தார் என்று தான் நினைக்கிறேன். ஆனால் உறுதியாக சொல்லமுடியவில்லை.
கேள்வி:- போயஸ் கார்டனை மீட்க ஏதேனும் நடவடிக்கையில் இறங்க உள்ளர்களா?
பதில்:- போயஸ் கார்டன் எங்களிடம் தான் உள்ளது. ஜெயலலிதா சொத்துக்கு உரிமை கொண்டாடுவது என் நோக்கம் அல்ல. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என்ற அங்கீகாரம் பெறவே நான் விரும்புகிறேன். அவரது அனைத்து வகையான ஆளுமைகளையும் தவறான பாதைக்கு சென்று விடாமல் மீட்பதே என் லட்சியம்.
கேள்வி:- போயஸ் கார்டன் இல்லத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறதா?
பதில்:- ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே பல முறைகேடுகள் நடந்து வந்தன. ஜெயலலிதாவின் கையெழுத்தை இவர்களாகவே போட்டுக் கொண்டதற்கும் ஆதாரம் இருக்கிறது. தன்னிடம் இந்த ஆதாரங்கள் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வமே பலமுறை கூறியுள்ளார். நிறைய பேரிடம் இதற்கான ஆதாரங்கள் உள்ளன.
கேள்வி:- ஜெயலலிதாவை தீபக் கொன்று விட்டார் என்று எப்படி கூறுகிறீர்கள்?
பதில்:- உரிய ஆதாரங்களுடன் அதனை நான் நிரூபிக்கிறேன்.
மேற்கண்டவாறு தீபா பதில் அளித்தார்.