ஆஸ்திரேலியா நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்தியும், தாக்குதலுக்கு திட்டம் தீட்டியும் கைதாகும் நபர்களை காலவரையின்றி சிறையில் அடைத்து வைக்கவும், ஆபத்தான தீவிரவாதிகளை கண்டதும் சுட்டுக் கொல்லவும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தீவிரவாதிகள் பரோலில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதர கைதிகளுக்கு அளிக்கப்படும் அனைத்துவகை சலுகைகளும் இவர்களுக்கு கிடைப்பதில்லை.
இதனால், அங்கிருக்கும் இதர கைதிகளையும் மூளைச் சலைவை செய்து தீவிராதிகளாக மாற்றி விடுகின்றனர். தற்போது அந்நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிறையில் மட்டும் தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய 33 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இதர கைதிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, தனியாக அடைத்துவைப்பதற்காக புதிய சிறைச்சாலை ஒன்றை கட்ட அரசு திட்டமிட்டது. இதையடுத்து, 4.7 கோடி டாலர்கள் செலவில் தீவிரவதிகளுக்கு என தனிச் சிறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிக உயரிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்படவுள்ள இந்த புதிய சிறைச்சாலை முதல்கட்டமாக 54 கைதிகள்வரை அடைத்து வைக்கும் வசதியுடன் அமையும். பின்னர், அதிகளவிலான கைதிகளை கையாள்வதற்கு வசதியாக விரிவாக்கம் செய்யப்படும் என நியூ சவுத் வேல்ஸ் மாநில சிறைத்துறை தலைமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.