பிரான்ஸ் நாட்டில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று, அதிபராக பதவி ஏற்றார். இந்த நிலையில் 577 இடங்களை கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்துக்கு முதல் சுற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகளைப் பெறுகிற வேட்பாளர்தான் வெற்றி பெற முடியும்.
அந்த வகையில் எந்தத் தொகுதியில் எல்லாம் அப்படி எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகளைப் பெறவில்லையோ அங்கெல்லாம் குறைந்தபட்சம் 12½ சதவீத ஓட்டுகளைப் பெற்ற வேட்பாளர்களை கொண்டு 2-வது சுற்று தேர்தல் 18-ந் தேதி நடைபெற இருக்கிறது.
நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது. பொதுவாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக இருந்தது. வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தலின் கீழ் பிரான்ஸ் உள்ளதால் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த தேர்தலில் அதிபர் இமானுவல் மேக்ரானின் எல்.ஆர்.இ.எம். கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடுகளில் உள்ள 11 பிரெஞ்சு தொகுதிகளில் 10 தொகுதிகளில் மேக்ரான் கட்சி வெற்றி பெற்று விட்டது. இதே நிலைதான் உள்நாட்டிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் மேக்ரான் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. பிரான்சில் மேக்ரான் ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தனிப்பெரும்பான்மை பெற வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் முதல் சுற்று வாக்குப்பதிவில் எமானுவேல் மேக்ரான் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். இத்தகவல்கள் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. எனினும் இந்த எண்ணிக்கையில் பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்கள் சேர்க்கப்படவில்லை.