நேற்றைய போட்டியிலும் அட்டென்டன்ஸ் போட்ட விஜய் மல்லையா – ‘திருடன்..திருடன்’ என ரசிகர்கள் கேலி

இந்தியாவில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சுமார் 9000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று விட்டு, தற்போது வங்கிகள் கடனை திரும்ப கேட்டதும் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் சென்று தஞ்சமடைந்திருக்கும் தொழிலதிவர் விஜய் மல்லையா இந்திய அரசுக்கு தண்ணி காட்டி வருகிறார்.

மல்லையா மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாக மத்திய அரசு கூறி வந்தாலும், அவர் அங்கு சொகுசு வாழ்க்கைதான் வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தும் மல்லையா, சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியை காண மைதானத்திற்கு வந்திருந்தார்.

மேலும், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் உடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவின. இது குறித்த கேள்விகளுக்கு “இனி இந்தியா மோதும் அனைத்து போட்டிகளையும் காண நேரில் வருவேன்” என கூலாக மல்லையா பதிலளித்தார். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் விராட் கோலியின் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றிலும் அவர் பங்கேற்று சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில், ஓவல் மைதானத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியையும் காண மல்லையா நேரில் வந்திருந்தார். ஆனால், அப்போது, சுற்றியிருந்த ரசிகர்கள் அவரை நோக்கி ‘திருடன்…திருடன்’ என கூச்சலிட்டுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.