ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தலைவர் மரணம்?: வெளியான பரபரப்பு தகவல்

சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளியும் ஐ.எஸ் தீவிரவாத இயக்க தலைவருமான அபு பக்கர் அல்-பாக்தாதி வான்வழி தாக்குதலில் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரியா அரசு தொலைக்காட்சி தான் இத்தகவலை வெளியிட்டுள்ளது. எனினும், ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

ஈராக் நாட்டில் உள்ள மோசூல் நகரில் பாக்தாதி தலைமறைவாக இருந்துவிட்டு சிரியாவில் உள்ள ராக்கா நகருக்கு புகுந்துள்ளார்.

ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்பு ஏற்படக் காரணமாக இருந்துள்ளார்.

பாக்தாதியை உயிருடன் அல்லது பிணமாக கொண்டு வரும் நபருக்கு 25 மில்லியன் டொலர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.

இந்நிலையில், சிரியா தொலைக்காட்சி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், சிரியா நடத்திய வான்வழி தாக்குதலில் பாக்தாதி உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளது.

எனினும், ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஊடகம் இத்தகவல் குறித்து எவ்வித கருத்தும் வெளியிடவில்லை.

பாக்தாதி உயிரிழந்து விட்டதாக கடந்த சில மாதங்களாக பல வதந்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.