சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த ஆட்டத்தில் (ஏ பிரிவு) உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்திடம் மண்ணை கவ்வியது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 35 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த போதிலும் நம்பிக்கையை இழக்கவில்லை.
கேப்டன் இயான் மோர்கன் (8 பவுண்டரி, 5 சிக்சருடன் 87 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் (13 பவுண்டரி, 2 சிக்சருடன் 102 ரன், நாட்-அவுட்) ஆகியோரின் ருத்ரதாண்டவத்தால் இங்கிலாந்து அணி கம்பீரமாக நிமிர்ந்தது. அந்த அணி 40.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 240 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதையடுத்து டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
சதம் அடித்த பென் ஸ்டோக்சை சக வீரர் பட்லர் பாராட்டுகிறார்.
சாம்பியன்ஸ் கோப்பையில் தொடர்ந்து 2-வது முறையாக ஆஸ்திரேலியா (2 முடிவில்லை, ஒரு தோல்வி) ஒரு வெற்றி கூட பெறாமல் போட்டியை விட்டு வெளியேறியது. இங்கிலாந்தின் வெற்றியின் மூலம், 3 புள்ளியுடன் காத்திருந்த வங்காளதேசத்துக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது. ஐ.சி.சி. தொடரில் வங்காளதேச அணி அரைஇறுதியை எட்டுவது இதுவே முதல் முறையாகும். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் இங்கிலாந்தை ‘நாக்-அவுட்’ செய்த வங்காளதேச அணி இன்று அந்த அணியின் தயவால் நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்திருக்கிறது.
முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து, இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாகும். வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து கேப்டன் மோர்கன், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சுக்கு புகழாரம் சூட்டினார். ‘பென் ஸ்டோக்ஸ், தங்கள் அணிக்கு வேண்டும் என்று ஒவ்வொரு அணிகளும் விரும்பியது ஐ.பி.எல். ஏலத்தில் நிரூபணமானது. ஆட்டத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர் ஸ்டோக்ஸ். பேட்டிங், பந்து வீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் கூட தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று விரும்புவார். இந்த ஆட்டத்தில் ‘மிட்-ஆன்’ திசையில் நிறைய ரன்களை மிச்சப்படுத்தினார். அவரால் இன்னும் உயர்ந்த நிலையை எட்ட முடியும். அத்தகைய திறமை அவரிடம் இருக்கிறது’ என்று மோர்கன் கூறினார்.