இசை உலகம் சிதைந்துவிட்டது: இளையராஜா

இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்கள்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் இந்த சந்திப்பு நடந்தது. இதில் இசைக்கலைஞர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள்.

அவர்கள் மத்தியில் இளையராஜா பேசியதாவது:-

“நான் திரைப்படங்களுக்கு இசையமைத்து 40 வருட காலங்கள் முடிந்து விட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் உட்கார்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, ஓலிப்பதிவு செய்வது என்பது இந்த உலகில் இந்த பேரண்டத்தில் நடக்கப்போவது இல்லை. அந்த காலகட்டம் முடிந்து போய் விட்டது.

இதற்கு அர்த்தம் என்னவென்றால், மியூசிக் போடுகிறவர்கள் தற்போது இல்லை. மியூசிக் வாசிக்கிறவர்கள் இல்லை. மியூசிக் பாடுகிறவர்களும் இல்லை. சினிமாவில் கையை காலை ஆட்டுகிற மாதிரி, இசை என்ற பெயரில் சும்மா ஏதோ நடக்கிறது. இங்கு பாடுகிறவர்களும் இனிமேல் பாடப்போவது இல்லை. காரணம் பாடல்களுக்கான டியூன் இல்லை.

எவ்வளவோ மிகப்பெரிய உயர்ந்த விஷயமாக இந்த இசை இருந்தது. எத்தனை ராகங்கள், எவ்வளவு கலப்புகள், எவ்வளவு வாத்திய கருவிகள், வாசிக்கும் விதங்கள்தான் எத்தனை, எத்தனை உணர்வுகள் எல்லாம் போய்விட்டன. திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சிட்டு வந்த மாதிரி அத்தனையும் சுத்தமாக போய்விட்டன. புருவத்தையும் சேர்த்து எடுத்து விட்டான். புருவத்தை எடுத்த மாதிரி, மொட்டை அடித்த மாதிரி, இப்போது இசை உலகமும், திரையுலகமும் ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் இசை உலகம் சிதைந்து விட்டது.

இவ்வாறு இளையராஜா பேசினார்.

பின்னர் இளையராஜாவுடன் ஆரம்பகாலத்தில் இருந்து பணியாற்றியவர்கள், பாடல்களுக்கு இசையமைத்த தங்கள் அனுபவங்களை பற்றி பேசினார்கள்.