நடிகை வரலட்சுமி சரத்குமார் ‘சேவ் சக்தி’ என்ற பெண்கள் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளார். இதன் மூலம் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வற்புறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று வரலட்சுமி சந்தித்தார். அப்போது பெண்கள் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அது பற்றிய விவரங்களை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு வரலட்சுமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
பெண்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பெண்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கான நீதிமன்றங்களை அதிக அளவில் அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு வரலட்சுமி கூறினார்.