இலங்கையில் காடுகள் மத்தியில் அமைந்துள்ள பாதைகளில் அதிவேகமாக வாகங்களை செலுத்துவதை தடை செய்யும் திட்டமொன்றை அமல்படுத்தவுள்ளதாக வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.
பாதுகாக்கபட்டுவரும் காடுகள் மத்தியில் அமைந்துள்ள பாதைகளில் சிலர் மிக கவனக்குறைவான முறையில் வேகமாக வாகனங்களை ஒட்டி வருவதாக புகார் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வாறான வாகனங்கள் மோதியதன் காரணமாக, யானைகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் கொல்லப்பட்ட சம்பவங்கள் கடந்த காலத்தில் அதிக அளவில் பதிவாகியதாக அவர் தெரிவித்தார்.
எனவே இவ்வாறான பாதைகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை மட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் வாகனங்களை செலுத்தக்கூடிய வகையில் புதிய சட்டமொன்றை அமல்படுத்தவுள்ளதாக அமைச்சர் கூறினார்.
அதேபோன்று இந்த சட்டத்தை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய புதிய திட்டமொன்றை நடைமுறைபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் ஜெயவிகரம பெரேரா மேலும் தெரிவித்தார்.