புதுடில்லி : ஜூலை 17 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது. ஜனாதிபதி தேர்தலுக்கான மனுத்தாக்கல் ஜூன் 14 இல் துவங்குகிறது. ஜனாதிபதி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் ஜூலை 20 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதனால் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதில் பா.ஜ.வும் காங்.கும் மும்முரம் காட்டி வருகின்றன. அதிலும் ஆளும் பா.ஜ. ஜனாதிபதி வேட்பாளர் தேர்வை அனைத்து வகைகளிலும் மேற்கொண்டு வருகிறது. பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா தனது அருணாச்சல பிரதேச பயணத்தை ஒத்திவைத்து விட்டு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
கூட்டணி கட்சி தலைவர்கள் கட்சியின் முக்கிய தலைவர்களிடம் பரிந்துரைகளை அளிக்குமாறு பா.ஜ. கேட்டுள்ளது. மேலும் பா.ஜ. ஆளும் மாநில முதல்வர்களிடமும் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த பரிந்துரைகளை அளிக்கும்படி கேட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்காக பா.ஜ. மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் அருண்ஜெட்லி ராஜ்நாத் சிங் வெங்கைய்ய நாயுடு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஜனாதிபதி வேட்பாளர் குறித்து கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடன் பேசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது