ஞானசாரர் மறைந்திருக்க காரணம் உயிர் அச்சுறுத்தல்! நீதிமன்றில் தொிவிப்பு

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இன்றைய தினமும் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதற்கு அமைய சட்டமா அதிபர் இன்று குற்றச்சாட்டு பத்திரத்தை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை, அவர் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியிருந்தார்.

தேரரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கோரியும், அதனை காரணங்காட்டியும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகவில்லை என்று ஞானசார தேரரின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஞானசார தேரரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு அரச சட்டத்தரணி இன்று விடுத்த கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், ஜூலை மாதம் 18, 19, 20 ஆம் திகதிகளில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இனங்களுக்கிடையேயான ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஞானசார தேரரை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் பல குழுக்களாக பிரிந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.