காணாமல் போனோர்களின் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளை: யாழில் ஜனாதிபதி

காணாமல் போனோர்களின் பெயர் விபரத்தினை வெளியிடுமாறு முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஜனாதிபதி யாழில் உறுதியளித்துள்ளார்.

யாழிற்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் காணாமல் போனோரின் உறவுகளையும், சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அந்த சந்திப்பின் போது, காணாமல் போனோரின் உறவுகள் காணாமல் போனோரின் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் உட்பட தமிழ் உறவுகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். போன்ற 3 கோரிக்கைகளை முன்வைத்து 114 நாட்களாக தங்களது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றதாகவும், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.

மகஜரில் இருந்த விடயங்களை தன்னால் நிறைவேற்ற முடியும் என ஜனாதிபதி தெரிவித்ததுடன், நாளை தேசிய பாதுகாப்பு சபை கலந்துரையாடல் நடைபெறவுள்ளமையினால் அந்த கலந்துரையாடலில் காணாமல் போனோரின் பெயர் விபரத்தினை வெளியிட கட்டளையிடுவேன் என உறுதியளித்துள்ளதாக காணாமல் போனோரின் உறவுகள் குறிப்பிட்டுள்ளனர்.

எமக்களித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை எங்களது கவனயீர்ப்பு போராட்டம் தொடரும் எனவும் ஜனாபதியின் வாக்குறுதிகள் எமக்கு சாதகமான அமையாவிடின், எங்களது போராட்ட வடிவங்களை மாற்றி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.